ஆண்டுதோறும் தங்கம் வாங்குவதற்கு மிக உகந்த நாளாகக் கருதப்படும் அட்சய திருதியை, இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாகவே இந்த நாளில் நகை விற்பனை உச்சத்தைத் தொடும். ஆனால், இந்த ஆண்டு உலகளாவிய அரசியல் சூழல்கள் மற்றும் உள்நாட்டுத் தேவைகள் காரணமாகத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ₹2,880 வரை உயர்ந்துள்ள நிலையில், இந்த விலையேற்றத்திலிருந்து தப்பிக்க ‘ப்ரீ புக்கிங்’ (Pre-booking) ஒரு சிறந்த தீர்வாக முன்வைக்கப்படுகிறது.
நீங்கள் இன்று ஒரு குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகையைச் செலுத்தி நகையைப் பதிவு செய்துவிட்டால், அட்சய திருதியை அன்று தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும், நீங்கள் பதிவு செய்த அன்றைய குறைந்த விலைக்கே நகையைப் பெற்றுக்கொள்ளலாம். இது திடீர் விலையேற்றத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். முன்கூட்டியே புக்கிங் செய்துவிட்டால், நீங்கள் நிதானமாக நகைகளைத் தேர்வு செய்யலாம். டெலிவரி எடுக்கும்போது நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
பல முன்னணி நிறுவனங்கள் ப்ரீ புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்குச் செய்கூலியில் தள்ளுபடி, கேஷ் பேக் மற்றும் இலவச வெள்ளி நாணயங்கள் போன்ற சிறப்புச் சலுகைகளை வழங்குகின்றன. சில நிறுவனங்கள் புக்கிங் செய்த நாளை விட, வாங்கும் நாளில் விலை குறைந்திருந்தால், அந்த குறைந்த விலைக்கே நகையை வழங்கும் சலுகையையும் தருகின்றன.
10 – 20 சதவீத தொகையை மட்டும் செலுத்தி உங்களுக்குப் பிடித்த மாடல்களை இப்போதே உறுதி செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கு முன் வாடிக்கையாளர்கள் சில முக்கியமான விஷயங்களைச் சரிபார்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்:
நீங்கள் வாங்கும் நகை பிஐஎஸ் (BIS) சான்றிதழ் பெற்ற ஹால்மார்க் நகையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். செய்கூலி, சேதாரம் மற்றும் ஒருவேளை நீங்கள் புக்கிங்கை ரத்து செய்தால் (Cancellation) எவ்வளவு தொகை கழிக்கப்படும் போன்ற ‘Terms & Conditions’ விபரங்களைத் தெளிவாகப் படித்துப் பார்க்க வேண்டும்.
ஈரான் போர் சூழல் அமைதியை நோக்கிச் சென்றாலும், தங்கம் விலை அடுத்த சில நாட்களில் மேலும் 3% வரை உயர வாய்ப்புள்ளதாக ஆக்மன்ட் நிறுவன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.





