செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் சாலை மற்றும் பொதுமக்களுக்கான நடைபாதைகளை ஆக்கிரமித்து சில வியாபாரிகள் கடைகள் நடத்தி வந்ததுடன், பல்வேறு பொருட்களையும் குவித்து வைத்திருந்தனர். இதனால் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர்.
இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்து வந்தனர். இதையடுத்து, மறைமலைநகர் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடனடியாக அகற்றுமாறு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புப் பொருட்களை காவல்துறையினர் அதிரடியாக அகற்றினர்.
இந்த திடீர் நடவடிக்கையால் மறைமலைநகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்களின் பாதுகாப்பான நடமாட்டத்திற்கும் சீரான போக்குவரத்திற்கும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் பெரும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





