கிழக்கு கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் கோவளம் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாஸ்ட் டேக் முறையில் உள்ளூர் வாகனங்களிடமிருந்தும் கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதாக கூறப்படுவதால், சுங்கச்சாவடியை முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி மற்றும் கோவளம் ஆகிய இரு சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. ஓ.எம்.ஆர். சாலையில் இருந்த அனைத்து சுங்கச்சாவடிகளும் ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில், இ.சி.ஆர். சாலையில் மட்டும் சுங்கச்சாவடிகள் தொடர்வது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கட்டண உயர்வின்படி, கார், ஜீப் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.2,890-ல் இருந்து ரூ.2,960 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக வாகனங்களுக்கான கட்டணமும் ரூ.4,665-ல் இருந்து ரூ.4,780 ஆக உயர்ந்துள்ளது. கனரக வாகனங்களுக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேளம்பாக்கம், கோவளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் தினசரி பள்ளி, கல்லூரி, வேலை மற்றும் மீன் சந்தைகளுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். முன்பு உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது பாஸ்ட் டேக் நடைமுறையால் அவர்களது கணக்கிலிருந்தும் தொகை கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில், உள்ளூர் மக்களுக்கு எந்த பயனும் அளிக்காத கோவளம் சுங்கச்சாவடியை அகற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சுங்கச்சாவடி பராமரிப்பு செலவுக்கு கூட வசூலாகும் தொகை போதாது என்பதால், இதன் தேவையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





