மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரர் கோயிலில் கோலாகல தேரோட்டம்: பக்தர்கள் திரளான பங்கேற்பு

0
6

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்பாள் சமேத வெண்காட்டீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி விசாக பிரமோற்சவ விழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா, இந்த ஆண்டு கடந்த மே 21ஆம் தேதி தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு ராஜகோபுரம், உள்பிரகாரங்கள் மற்றும் சன்னதிகள் அனைத்தும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. கடந்த 22ஆம் தேதி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை, அதிகார நந்தி, பூத வாகனம், யாளி வாகனம், திருமுல்லைப்பால் உற்சவம் மற்றும் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று காலை நடைபெற்றது. வெண்காட்டீஸ்வரர், மீனாட்சி அம்பாள் மற்றும் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் மூன்று தேர்களில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் நமசிவாய” என பக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேரை இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர்கள் பிற்பகல் 2.30 மணியளவில் நிலையை அடைந்தன.

இதனை தொடர்ந்து கேடயம், குதிரை வாகனம், மஞ்சள் நீர் வீதி உலா, தீர்த்தவாரி மற்றும் சங்காபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம விழா குழுவினர் செய்து வருகின்றனர்.