செங்கல்பட்டு மாவட்ட நீர்நிலைகளில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அனுமதி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,164 ஏரிகளில் இருந்து மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வருவாய் வட்டத்திற்குள் வசிக்கும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் தங்களது நில விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் கிராம நிர்வாக அலுவலர் (VAO) வழங்கும் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் பெறப்பட்ட 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் ஆய்வு செய்து அனுமதி வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் ஏரிகள் தூர்வாரப்படுவதோடு, விவசாய நிலங்களின் வளமும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





