விஜய் கைநழுவிய பவர் சென்டர்… லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் ஐபிஎஸ் நியமனம்!

0
5

தேர்தல் பிரசாரத்தின் போது ‘திமுக விசுவாசி’ என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாகக் குற்றம்சாட்டிய அருண் ஐபிஎஸ், தற்பொழுது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் தார்மீக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலின்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருண் ஐபிஎஸ் மீது, தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உளவுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஸ்டாலினுக்கு விசுவாசமாகச் செயல்படுவதாகச் சரமாரியாகப் புகார்களை அடுக்கியிருந்தார்; மேலும், தவெகவைப் பிரசாரம் செய்யவிடாமல் தடுப்பதாகக் கூறி மார்ச் 28-ஆம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் தவெக தலைவர் விஜயே நேரடியாகப் புகாரளித்ததை அடுத்து அருண் கமிஷனர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார். தவெக ஆட்சி அமைந்த பிறகு அருண் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று தொண்டர்கள் நம்பியிருந்த வேளையில், யாரும் எதிர்பாரா விதமாக டிஜிபிக்கு இணையான லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பணியில் அவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தவெக வட்டாரத்தில் விசாரித்தபோது, விஜய் முதல்வராக இருந்தாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தை மேலிடத்தில் உள்ள மூன்று பேர் கொண்ட ‘பவர் சென்டர்’தான் பார்த்துக் கொள்கிறது என்றும், பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் இந்தப் பவர் சென்டரிடம் அருண் சரணடைந்ததோடு கொளத்தூரில் தவெகவுக்கு ஆதரவாகச் சில வேலைகளைச் செய்துகொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. விஜய் முதல்வரான பிறகு அவரை அருண் இருமுறை சந்திக்க ஏற்பாடு செய்த இந்தப் பவர் சென்டர், தவெக-விசிக கூட்டணி அமைந்த பிறகு திருமாவளவன் மூலமாகவும் அருணுக்குச் சிபாரிசு செய்ய வைத்து இந்த மெகா பதவியைப் பெற்றுத் தந்துள்ளதாகத் தவெகவினர் அதிருப்தியுடன் பேசி வருகின்றனர்.