திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் வெப்பத்தை தணிக்க நடைபாதையில் வெள்ளை பெயின்ட்

0
8

திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில் கோடை வெப்பத்தால் பக்தர்கள் அவதியடைந்ததை தொடர்ந்து, நடைபாதையில் வெப்பத்தை குறைக்கும் வகையில் வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர் கந்தசுவாமி கோவில், பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் நிழற்கூரைகள் மற்றும் உள் பகுதிகளில் மின் விசிறி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தற்போது கோடைகால வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், வழக்கத்தை விட கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், கோவில் வளாகத்தில் சில இடங்களில் பக்தர்கள் நடந்து செல்லும்போது தரை வெப்பம் அதிகமாக இருந்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக காலில் செருப்பு இன்றி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் வெப்பத்தால் சிரமப்படுவதாகவும், தரையில் வெள்ளை பெயின்ட் அடித்தால் வெப்பம் குறையும் என்றும் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் நடைபாதையில் வெள்ளை பெயின்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டது. தற்போது நடைபாதையில் வெள்ளை பூச்சு செய்யப்பட்டுள்ளதால் தரை வெப்பம் குறைந்து, பக்தர்கள் சிரமமின்றி கோவிலில் தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.