செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஆட்சிவிளாகம் பகுதியில் திருநங்கைகளுக்காகக் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள், சீரமைப்புப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் முடங்கியுள்ளன. தங்களின் சொந்த வீடு கனவு நனவாகாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திருநங்கைகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோத்துப்பாக்கம், படாளம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமாக வீட்டுமனை மற்றும் வீடுகள் இல்லாத குறையைப் போக்க, அரசு சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தொகுப்பு வீடுகள் கட்டித்தரத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுமார் 4.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தலா 8.78 லட்சம் ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், அந்த வீடுகள் தரமற்ற முறையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் முடிவில், கட்டடத்தின் சிமெண்ட் பூச்சுகள் மிகவும் தரமற்ற முறையில் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து வீடுகளின் சிமெண்ட் பூச்சுகளையும் அகற்றிவிட்டு, மீண்டும் புதிய தரமான சிமெண்ட் பூச்சுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி, 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், ஓராண்டு கடந்தும் தற்போது வரை பணிகள் நிறைவடையாமல் மந்தமான நிலையிலேயே நீடிக்கின்றன.
தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும், வீடுகள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. வாடகை வீடுகளில் வசித்து வரும் திருநங்கைகள், பொருளாதார ரீதியாகப் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். “எங்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. சீரமைப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முடித்து, உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.





