டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு! முன்கூட்டியே சொன்னாரா கரோலின் லெவிட்? வைரல் வீடியோ பின்னணி!

0
1

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற ‘வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்து’ (White House Correspondents’ Dinner) நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை விட, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் முன்னதாகப் பேசிய வீடியோ ஒன்று தற்போது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நேற்று இரவு இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோல் தாமஸ் ஆலன் என்ற 31 வயது பொறியாளர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு டிரம்பையும், அவரது மனைவியையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் அளித்த பேட்டி இப்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், “இன்று இரவு சில ‘ஷாட்கள்’ (Shots) சுடப்படும். இது மிகவும் வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கப் போகிறது. டிரம்ப்பின் ஸ்டைலைப் பார்க்க அனைவரும் தயாராக இருங்கள்” என்று கூறியிருந்தார்.

பொதுவாக, டிரம்ப் தனது பேச்சின் மூலம் ஊடகங்களை வசைபாடுவதை அல்லது நையாண்டி செய்வதைக் குறிக்கவே ‘Shots’ (சொற்களால் தாக்குதல்) என்ற வார்த்தையை லெவிட் பயன்படுத்தியதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், அதே இரவில் நிஜமாகவே துப்பாக்கிச்சூடு (Gunshots) நடந்ததால், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியா என்ற கோணத்தில் நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். “இது வெறும் தற்செயலான வார்த்தைப் பிரயோகம் மட்டுமே; இதற்கும் விபத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

தாக்குதலில் இருந்து தப்பிய பிறகு பேசிய அதிபர் டிரம்ப், “அதிபர் பதவி என்பது ஒரு ஆபத்தான வேலை. இத்தகைய சவால்கள் இந்தப் பதவியில் ஒரு பகுதிதான்” என மிகவும் நிதானமாகத் தெரிவித்தார். பாதுகாப்பு அமைப்புகளின் உடனடி நடவடிக்கையைப் பாராட்டிய அவர், இந்த விருந்து நிகழ்ச்சியைச் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்போவதாக உறுதி அளித்தார். இந்தச் சம்பவம் அமெரிக்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.