பழனிசாமிக்கு அறியாமையா, அச்சமா? – ப.சிதம்பரம் கேள்வி

0
6

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

“தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பழனிசாமிக்கு இருப்பது அறியாமையா அல்லது அச்சமா என்பது புரியவில்லை,” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், 2023ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 106வது அரசியல் திருத்தச் சட்டத்தின் மூலம் மக்களவை தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் விளக்கினார்.

அதேவேளை, தற்போதைய 543 தொகுதிகளுக்குப் பதிலாக 850 தொகுதிகளாக அதிகரிக்கப்படும் என பேசப்படுவது “மாயை” என சிதம்பரம் குற்றம் சாட்டினார். அரசியல் சாசனத்தின் 81வது பிரிவின்படி மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்றும், எந்த கணக்கெடுப்பை அடிப்படையாக எடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் தீர்மானம் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டின் நிலை குறித்து பேசுகையில், 39 இடங்கள் 59 ஆக உயரும் என கூறப்படுவதாலும், மறுசீரமைப்புக்குப் பிறகு அது 47 ஆக குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் 80 இடங்கள் 120 ஆகவும், மறுசீரமைப்புக்குப் பிறகு 137 அல்லது 140 ஆகவும் அதிகரிக்கும் என்றார்.

மத்திய அரசு உண்மையை முழுமையாக வெளிப்படுத்தாமல், பாதி தகவல்களை மட்டுமே வழங்குகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதனால்தான் இண்டியா கூட்டணி கட்சிகள் இந்த மசோதாவை எதிர்க்கின்றன என்றார்.

மேலும், “இந்த விவகாரத்தில் பழனிசாமி தனது கருத்தை தெளிவாக கூறாமல், மற்றவர்களின் கருத்தையே மீண்டும் கூறுகிறார்,” என்றும் விமர்சித்தார். மசோதா திரும்ப பெறப்பட்டால் பிரதமருக்கு நன்றி தெரிவிப்போம் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.