நடிகரிடம் நாட்டை ஒப்படைப்பதா? பிரகாஷ்ராஜ் கேள்வி

0
6

பழநி தொகுதியில் திமுக கூட்டணியை ஆதரித்து நடைபெற்ற இளைஞர் கலை விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு ஆற்றிய பேச்சு அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என். பாண்டிக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இளைஞர் மற்றும் மாணவர் அணிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

பேச்சில், “தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல், திராவிட மாடல், அடிமை மாடல் மற்றும் சினிமா மாடல் ஆகிய மூன்று கோட்பாடுகளுக்கிடையேயான போட்டி” என பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார். திராவிட மாடல் கல்வி, மொழி மற்றும் சமூக நீதி ஆகியவற்றை பாதுகாத்ததாக அவர் வலியுறுத்தினார்.

மேலும், “அடிமை மாடல் நம் சுயமரியாதையை இழக்கச் செய்து, மத்திய ஆட்சிக்கு முன் தலைகுனிய வைக்கும்” என்றும் அவர் விமர்சித்தார். தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேசும்போது, அது தென்னிந்தியாவின் அரசியல் சமநிலையை பாதிக்கும் என்றும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

சினிமா மாடலை விமர்சித்த அவர், “திரையில் ஒரு பாடலில் மருத்துவர், பொறியாளர், முதல்வர் ஆகலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் மக்களின் பிரச்சினைகளில் நிலைத்து நிற்பது முக்கியம்” என்றார். மேலும், “நடிகருக்காக விசில் அடிக்கலாம்; ஆனால் நாட்டை ஒப்படைக்க முடியாது” என்ற அவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தல் கட்சிகளுக்கிடையேயான போட்டி மட்டுமல்ல, ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையேயான போராட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார். வாக்காளர்கள் எந்த பாதையை தேர்வு செய்கிறார்கள் என்பதில்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் இருக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.