ஈரான் அரசு அணு ஆணுதம் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அரசு அந்நாட்டின் மீது போர் நடத்தி வரும் நிலையில் வடகொரியா அரசு கப்பர் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தி உள்ள சம்பவம் உலக மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன ‘சோய் ஹியோன்’ போர்க்கப்பலில் இருந்து முக்கிய ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 5,000 டன் எடையுடைய இந்த போர்க்கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 2 நவீன குரூஸ் ஏவுகணைகள் மற்றும் கப்பல்களை இலக்காகக் கொண்டு தாக்கும் 3 ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த குரூஸ் ஏவுகணைகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறந்து, மேற்கு கடல் பகுதியில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை துல்லியமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையை நேரில் பார்வையிட்ட கிம் ஜாங் அன், வடகொரிய கடற்படையின் அணு ஆயுத திறனை மேலும் விரிவுபடுத்துவோம் என தெரிவித்தார்.
மேலும், கட்டுமானத்தில் உள்ள 3 மற்றும் 4வது போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள் குறித்தும் அவர் ஆய்வு செய்துள்ளார். இக்கப்பல்கள் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தென்கொரிய நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
உலகளவில் அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஏவுகணை சோதனை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இதற்கு அமெரிக்கா என்ன மாதிரியான எதிர்வினையாற்றும் என்ற கேள்வி உலக மக்களிடம் எழுந்துள்ளது.





