செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், திமுக அரசை வீழ்த்த வேண்டி கோயில் வாசலில் 108 சூரைத்தேங்காய்களை உடைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரன் இன்று தனது தேர்தல் களப்பணியில் விஸ்வரூபம் எடுத்தார். ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இருங்குன்றப்பள்ளி, பீடிநகர், ஒழலூர், வேம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளங்கள் முழங்க, பாஜக, பாமக, அமமுக மற்றும் புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் புடைசூழ அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருங்குன்றப்பள்ளி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த வேட்பாளர், அங்கிருந்த பொதுமக்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது கோயில் வாசலில் திடீரென “திமுக ஒழிக, ஒழிக” என ஆக்ரோஷமாக கோஷமிட்ட கஜேந்திரன், தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாகவும், அரசியல் எதிரிகளை வீழ்த்தும் குறியீடாகவும் 108 சூரைத்தேங்காய்களைச் சிதற உடைத்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவின் இந்த ‘அக்ரசிவ்’ பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. களத்தில் நிலவும் ஆளும் கட்சி எதிர்ப்பு அலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் நோக்கில் இந்த வியூகம் அமைக்கப்பட்டதாக உடன்பிறப்புகள் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அவர், தமக்கு ஒரு வாய்ப்பு வழங்கினால் தொகுதியின் தலையெழுத்தையே மாற்றி எழுதுவேன் என உறுதி அளித்தார். “என்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் உடனடியாக வழங்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தித் தருவதோடு, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஃபிரிட்ஜ் மற்றும் தாலிக்கு ஒரு சவரன் தங்கம் உள்ளிட்ட நலத்திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவேன்” என வாக்குறுதி அளித்தார். இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களித்துத் தன்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.





