ராக்கெட் லாஞ்சரில் கால் வைத்த கல்லூரி மாணவன் – அடுத்த நொடியே நடந்த கோரம்..!

0
9

செங்கல்பட்டு அனுமந்தபுரம் ராணுவப் பயிற்சி மைய மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றபோது, புதரில் கிடந்த ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் தனியார் கல்லூரி மாணவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் மலைப்பகுதியில் தடையை மீறி டிரெக்கிங் சென்ற தனியார் கல்லூரி மாணவர்கள் மீது, அங்குக் கிடந்த ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்துள்ளது. பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் இறுதி ஆண்டு பயின்று வரும் 6 மாணவர்கள், நேற்று முன்தினம் மாலை கூகுள் மேப் உதவியுடன் புதிய பாதையைத் தேடி அனுமந்தபுரம் ராணுவ பயிற்சி மைய மலைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். மாலை 5.30 மணியளவில் மலையிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது, புதர்களுக்கு இடையே மறைந்து கிடந்த ராக்கெட் லாஞ்சர் ஒன்றை பெங்களூருவைச் சேர்ந்த யமான்சூ யாதவ் (21) எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். அடுத்த சில நொடிகளில் ‘டெட்டனேட்’ ஆன அந்த ராக்கெட் லாஞ்சர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், யமான்சூ யாதவ் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்தக் கோர விபத்தில் அவருடன் சென்ற விஷால், ஆரியன் சர்மா, கிருஷ்ணா மற்றும் நிஷ்காஷ் ஆகிய நான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இவர்களுடன் வந்த விராட் என்ற மாணவர் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி தப்பினார். அவர் உடனடியாக ‘கண்ட்ரோல் ரூம்’ மற்றும் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கவே, மறைமலை நகர் போலீசார் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ‘கிரவுண்ட் ஜீரோ’வில் ஆய்வு செய்ததில், அது ராணுவத்தினர் பயிற்சியின் போது பயன்படுத்திய வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் என்பது உறுதி செய்யப்பட்டது. படுகாயமடைந்த மாணவர்கள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் சென்று நிலவரத்தைக் கேட்டறிந்தார்.

அனுமந்தபுரம் மலைப்பகுதியானது பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினரின் ‘ஃபயரிங் ரேஞ்ச்’ ஆகச் செயல்பட்டு வருகிறது. இங்குத் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு வீசும் பயிற்சிகள் அடிக்கடி நடைபெறும் என்பதால், இது பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பயிற்சியின் போது வெடிக்காமல் விடப்படும் ‘மிஸ்பயர்டு’ (misfired) தோட்டாக்கள் மற்றும் லாஞ்சர்களை அப்பகுதியினர் ரகசியமாகச் சேகரித்து பழைய இரும்புக்கடையில் விற்கும் ‘ஸ்கிராப்’ மாஃபியாக்களும் இங்கு நடமாடி வருகின்றனர். ஏற்கனவே இத்தகைய வெடிபொருட்கள் குடியிருப்புகளில் விழுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மாணவர்களின் உயிரைப் பறித்துள்ள இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கூகுள் மேப் போன்ற தொழில்நுட்பங்கள் ‘ஆப்-ரோடு’ பாதைகளைக் காட்டினாலும், தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்த எச்சரிக்கையை வழங்குவதில்லை. இந்த ‘ரெஸ்ட்ரிக்டட் ஏரியா’வுக்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்க நிரந்தர போலீஸ் அவுட்போஸ்ட் அமைக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினர். ‘க்ரைம் சீன்’ சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், தடய அறிவியல் நிபுணர்கள் அங்குள்ள இதர வெடிபொருட்களைச் சேகரித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.