நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் – WhatsApp-ல்

0
5

தமிழகத்தில் 2025-2026 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் மாநிலம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுடன் தனித்தேர்வர்களும் தேர்வு எழுதியிருந்தனர். தேர்வுகள் முடிந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன.

முன்னதாக, அரசியல் சூழ்நிலை காரணமாக தேர்வு முடிவுகள் தாமதமாகலாம் என்ற தகவல்கள் வெளியானதால் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் அனைத்து சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திட்டமிட்டபடி மே 8ஆம் தேதி காலை முடிவுகள் வெளியாகும் என கல்வித்துறை உறுதி செய்துள்ளது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in/ மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலும் முடிவுகள் வழங்கப்படும்.

அதோடு, மாணவர்கள் வழங்கிய கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலமும் முடிவுகள் அனுப்பப்பட உள்ளன. இந்த ஆண்டில் முதல் முறையாக WhatsApp மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற எண்ணிற்கு “Hi” அனுப்பி, தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு முடிவுகளை பெறலாம்.

இந்த புதிய வசதி மாணவர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் தேர்வு முடிவுகளை பெற உதவும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.