காதலியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறி மதுபோதையில் மாமனை இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை ஆதிவாசி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (32). இவரது மனைவி செல்வி (29). இவரது மைத்துனர் கார்த்திக் (25) மற்றும் அவர்களது உறவினரான கவிதா (19) இருவரும் செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில் அரிசி ஆலையில் கடந்த 20 நாட்களாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். கார்த்திக் மற்றும் கவிதா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அடுத்த சில மாதங்களில் கார்த்திக் மற்றும் கவிதா ஆகியோருக்கு திருமணம் செய்ய குடும்ப பெரியோர்களும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவிதா மற்றும் தங்கராஜ் ஆகிய இருவரும், தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது கார்த்திக்கு தெரியவர தங்கராஜிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குடும்பத்தினரும் தங்கராஜ் மற்றும் கவிதா ஆகிய இருவரையும் கண்டித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அரிசி ஆலையில் பணி முடித்துவிட்டு கார்த்திக் மது குடித்துள்ளார். பின்னர் தங்கராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையே வாக்கு வாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கார்த்திக் அருகிலிருந்த இரும்பு கம்பியை கொண்டு தங்கராஜின் வயிற்றில் குத்தியுள்ளார்.
இதில் தங்கராஜ் பலத்தகாயம் அடைந்த தங்கராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
