சென்னை பல்லாவரம் அருகே பணிக்குச் சென்று கொண்டிருந்த பெண் காவலர் மீது சொகுசு கார் ஒன்று பயங்கரமாக மோதியதில், அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய பெண்ணின் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் சரண்யா. இவர் போழிச்சலூர் பகுதியில் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போலத் தனது இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்குப் பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்குச் சாலையிலிருந்து மின்னல் வேகத்தில் வந்த ‘ஸ்கார்பியோ’ (Scorpio) வாகனம், எதிர்பாராத விதமாகச் சரண்யாவின் வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரண்யாவுக்குக் கையில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிட்லபாக்கம் போக்குவரத்துப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தது ரெபேக்கா என்ற பெண் என்பது தெரியவந்தது. அவரது கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சிகரமான தகவலாக, விபத்தை ஏற்படுத்திய அந்த வாகனத்திற்கு ‘தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்’ (Third-party insurance) கூட இல்லை என்பதும், காரை ஓட்டிய ரெபேக்கா மீது ஏற்கனவே இதுபோல மூன்று விபத்து வழக்குகள் நிலுவையில் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போது பெண் காவலர் மீது கார் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வரும் இத்தகைய நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





