விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே நிகழ்ந்த பயங்கர பட்டாசு ஆலை விபத்தில், 23 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் விதிகளை மீறி ஆலை இயங்கியதே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
விருதுநகர் வாச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும், ஆலை வராண்டா பகுதியில் சில பணியாளர்கள் பட்டாசு உற்பத்தி மற்றும் மூலப்பொருட்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில், அடுத்தடுத்து இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறின. சில கட்டிடங்கள் இடிபாடுகளுடன் தரைமட்டமாகின. விபத்து நடந்த பின்னரும் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்ததால், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சவால்களைச் சந்தித்தனர். இந்தக் கோர விபத்தில் இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், 6 பேர் பலத்த தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்:
பேச்சியம்மாள் (51), சாரதா (40), பஞ்சவர்ணம் (56), வீரபத்திரன் (45), சங்கிலித் தங்கம் (40) மற்றும் அருண்குமார் (23) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் விருதுநகர் விரைந்துள்ளனர். சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா மற்றும் எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
பட்டாசு ஆலைகளில் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதே முதல் விதிமீறல். ஆலை உரிமம் பெற்று இயங்கினாலும், விடுமுறை நாளில் தொழிலாளர்களைப் பணியமர்த்தியது சட்டப்படி குற்றம்,” என ஆட்சியர் தெரிவித்தார். விபத்திற்குப் பின் தலைமறைவாகியுள்ள ஆலை உரிமையாளர் மற்றும் ஃபோர்மேனைப் பிடிக்க 4 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஸ்ரீநாதா கூறினார்.
ஈரான் போர் காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாலும், வரும் சட்டமன்றத் தேர்தல் காரணமாக விரைவில் ஒரு வார விடுமுறை அளிக்கப்பட உள்ளதாலும், பல ஆலைகள் விதிகளை மீறி விடுமுறை நாட்களில் இயங்குவதாகத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை முதலமைச்சர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.





