Home Politics “ஜோசப் விஜய் எனும் நான்…”: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் விஜய்!

“ஜோசப் விஜய் எனும் நான்…”: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் விஜய்!

0

தமிழக அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்டுள்ள ஒரு மாபெரும் மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், இன்று காலை தமிழகத்தின் புதிய முதலமைச்சராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். 1967 முதல் திராவிடக் கட்சிகளின் பிடியில் இருந்த தமிழக ஆட்சி அதிகாரம், இன்று ஒரு புதிய திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

பதவியேற்பு விழா நடைபெற்ற சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிற்குள் விஜய் நுழைந்த தருணமே, அங்குக் கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் “விஜய்… விஜய்…” என விண்ணதிர முழக்கமிட்டு அவரை வரவேற்றனர். தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க, விஜய் மிக உரத்த குரலில் ஆணித்தரமாகத் தனது உறுதிமொழியை வாசித்தார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு அரங்கையே அதிரச் செய்தனர்.

விஜய் தனது உறுதிமொழியை “ஆண்டவன் மீது ஆணையிட்டு” ஏற்றுக்கொண்டார். ஒரு மதச்சார்பற்ற கட்சியின் தலைவராக இருந்தாலும், தனது தனிப்பட்ட நம்பிக்கையை உறுதிமொழியில் வெளிப்படுத்தினார்.

பதவியேற்பு விழா மேடையில் விஜயுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். ராகுல் காந்தியின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணியின் வலிமையைப் பறைசாற்றுவதாக அமைந்தது.

விஜய்யைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் ராஜ்மோகன் பதவிப்பிரமாணம் ஏற்றபோது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. “ஆண்டவன் மீது ஆணையிட்டு” என அவர் வாசித்தபோது, மேடையில் இருந்த முதலமைச்சர் விஜயைப் பார்த்து, அவரையே தன் தெய்வமாகக் கருதுவது போல அந்த வார்த்தைகளைக் கூறினார். இதைக் கண்ட தொண்டர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

முறைப்படி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்ற கையோடு 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது மக்கள் பணியைத் தொடங்கியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version