தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் சினிமாவில் இருந்து முழுமையாக விலகும் முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் இந்தத் திடீர் முடிவு குறித்துத் தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ள முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2024-இல் தவெக-வைத் தொடங்கியபோது, தான் நடித்து வந்த ‘ஜனநாயகன்’ திரைப்படமே தனது கடைசிப் படம் என விஜய் அறிவித்திருந்தார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையதளத்தில் கசிந்ததால் படக்குழுவிற்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதேசமயம், தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்காது எனக் கருதியதாலும், படக்குழுவின் நஷ்டத்தை ஈடுகட்டவும் மீண்டும் சினிமாவில் நடிக்க விஜய் முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுப் பெரும் சாதனை படைத்துள்ளது. இதனால், இனி வரும் காலங்களில் மக்கள் பணிக்காக முழுமையாக நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதால், சினிமாவில் நடிக்க முடியாது என்ற இறுதி முடிவை அவர் எடுத்துள்ளார்.
‘ஜனநாயகன்’ படக்குழுவிற்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, மீண்டும் சினிமாவில் நடிக்காமல் வேறு வழிகளில் முயற்சி செய்யப்படும் எனத் தவெக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஏற்கனவே 108 எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அவரது இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“நாட்டு மக்கள் அனைவரும் நல்லா வாழப் போகிறார்கள்” என்று பாடகர் வேல்முருகன் வாழ்த்தியது போல, முழுநேர அரசியல்வாதியாகத் தனது பயணத்தைத் தொடர விஜய் தயாராகிவிட்டார்.
