தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட வரிசை முறை பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக அரசு விழாக்களின் மரபுப்படி முதலாவதாக இசைக்கப்பட வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து, இன்றைய விழாவில் மூன்றாவதாக இசைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சில விசேஷ உத்தரவுகளுக்கு இணங்க, இன்றைய பதவியேற்பு விழாவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. விழா தொடங்கியதும் முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முறைப்படி தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பொதுவாகத் தமிழக அரசு விழாக்களில் தொடக்கத்தில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, இன்று இந்த இரண்டு பாடல்களுக்குப் பிறகு மூன்றாவதாக இசைக்கப்பட்டது.
மத்திய அரசின் பிரதிநிதிகள் மற்றும் தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் விழாக்களில் சில நேரங்களில் இத்தகைய முன்னுரிமை மாற்றங்கள் நிகழ்வது வழக்கமே என்று ஒருதரப்பு கூறினாலும், “தமிழுக்குத்தான் முதல் மரியாதை” எனப் பேசி வந்த விஜய், தனது பதவியேற்பு விழாவிலேயே இந்த மரபு மாற்றத்தை அனுமதித்தது ஏன் எனத் தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே எப்போதும் முதலிடம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தவெக ஆட்சியின் முதல் நாளிலேயே இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்கள் மேடையில் இருந்த வேளையில், தேசிய ஒருமைப்பாட்டைக் காட்டும் விதமாக இந்த வரிசை முறை பின்பற்றப்பட்டதா அல்லது டெல்லியின் நேரடி அழுத்தம் காரணமா என்கிற விவாதம் மேலெழுந்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் புதிய அமைச்சரவை தரப்பிலிருந்து இன்னும் வெளியாகவில்லை. எனினும், தமிழ் மண்ணின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டது இன்றைய விழாவின் ஒரு கசப்பான அதிர்ச்சியாகவே பலரால் பார்க்கப்படுகிறது.
