கோடைக்காலம் என்றாலே பகல் நேர வெயிலை விட, நகரங்களில் இரவு நேரத்தில் நிலவும் புழுக்கமும் வெப்பமும் பலரை நிலைகுலையச் செய்கிறது. கிராமங்களில் இரவு வேளைகளில் ஓரளவு குளுமை நிலவினாலும், சென்னை போன்ற பெருநகரங்களில் நள்ளிரவிலும் வெப்பம் குறையாமல் இருப்பதற்குக் காரணம் ‘நகர்ப்புற வெப்பத் தீவு’ (Urban Heat Island) விளைவுதான்.
நகரங்களில் வெப்பநிலை அதிகரிப்பதற்குப் பின்னால் பல அறிவியல் மற்றும் கட்டமைப்புக் காரணங்கள் உள்ளன. நகரங்களில் உள்ள தார்ச் சாலைகள் மற்றும் கான்கிரீட் கட்டடங்கள் பகல் முழுவதும் சூரியனின் வெப்பத்தை உறிஞ்சி வைத்துக் கொள்கின்றன. சூரியன் மறைந்த பிறகு, அவை மெதுவாக அந்த வெப்பத்தை வெளிப்படுத்துவதால் இரவு நேரமும் வெப்பமாகவே இருக்கிறது.
மரங்கள், நீர்நிலைகள் மற்றும் மண் பரப்பு ஆகியவை வெப்பத்தைத் தணிக்கும் ‘ஏர் கூலர்களாக’ செயல்படுகின்றன. ஆனால் நகரங்களில் இவை அழிக்கப்பட்டு கட்டடங்கள் வருவதால் வெப்பம் வெளியேற வழியில்லாமல் தேங்குகிறது.
வாகனங்களின் புகை, ஏ.சி இயந்திரங்கள் வெளியேற்றும் வெப்பம் மற்றும் தொழிற்சாலைகளின் செயல்பாடு ஆகியவை நகர்ப்புற வளிமண்டலத்தைச் சூடாகவே வைத்திருக்கின்றன. ஒரே இடத்தில் அதிகமான மக்கள் வசிப்பதும் ஒரு குறிப்பிட்ட பகுதியின் வெப்பம் அதிகரிக்கக் காரணமாகிறது.
சென்னையில் அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர் போன்ற அடர்த்தியான பகுதிகளில் வெப்பநிலை 25°C – 30°C வரை பதிவாகிறது. ஆனால் கிண்டி தேசியப் பூங்கா மற்றும் அடையாறு ஆற்றோரங்களில் இது 23.5°C ஆகக் குறைவாக உள்ளது.
இயற்கையாகவே மனித உடல் உறக்கத்தின் போது தனது வெப்பநிலையைக் குறைத்துக் கொள்ளும் (Circadian Rhythm). ஆனால் சுற்றுப்புற வெப்பம் அதிகமாக இருக்கும்போது உடல் தன்னைத் தானே குளிர்விக்கக் கடுமையாகப் போராடுகிறது.
உடல் வெப்பத்தைத் தணிக்க இதயம் அதிக ரத்தத்தை வெளியேற்ற வேண்டியுள்ளதால், இதய நோயாளிகளுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. தீவிர நீரிழப்பு சிறுநீரகத்தைப் பாதிக்கலாம். அதீத புழுக்கத்தால் தூக்கம் பாதிக்கப்படுவது எரிச்சல், பசியின்மை மற்றும் மனநலச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
வெப்பத்தைச் சமாளிக்கும் திறன் குறைவாக உள்ள இவர்களுக்கு வெப்ப அலைகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு. பகலில் மட்டுமல்லாது இரவிலும் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும். ஆனால், பீர் போன்ற மதுவகைகள் மற்றும் காஃபின் பானங்களைத் தவிர்க்கவும் (இவை உடலை மேலும் நீரிழப்புக்கு உள்ளாக்கும்).
இரவு 7 மணிக்கு மேல் உட்புறத்தை விட வெளிப்புற வெப்பம் குறைவாக இருக்கும். எனவே ஜன்னல்களைத் திறந்து வைத்துக் காற்றோட்டத்தை உறுதி செய்யவும். ஏ.சி-யை 27°C-ல் வைத்து ஒரு மின்விசிறியை இயக்கினால், அறை 23°C குளிர்ச்சியில் இருப்பது போல் உணரப்படும். இது மின்சாரத்தையும் சேமிக்கும்.
விசிறி எச்சரிக்கை: அறை வெப்பநிலை 40°C-க்கு மேல் இருந்தால் மின்விசிறியைப் பயன்படுத்த வேண்டாம்; அது சுடு காற்றையே வீசும். தனிமனித விழிப்புணர்வு ஒருபுறம் இருந்தாலும், அரசாங்கம் மற்றும் நகரத் திட்டமிடல் மூலம் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சாலை ஓரங்களில் அதிக மரங்களை நடுவது. கட்டடங்களின் மொட்டை மாடிகளில் ‘பசுமை கூரைகள்’ (Green Roofs) அமைப்பது. நீர்நிலைகளைப் பாதுகாத்து நகரத்தின் நுரையீரல் போன்ற பூங்காக்களைப் பெருக்குவது.
