Home Trending/Viral Viral அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹோர்முஸ் நீரிணை: டிரம்ப் அறிவிப்பால் ஈரானுக்கு நெருக்கடி!

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹோர்முஸ் நீரிணை: டிரம்ப் அறிவிப்பால் ஈரானுக்கு நெருக்கடி!

0

சர்வதேசக் கடல் எல்லைகளில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) அமெரிக்கக் கடற்படை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், ஈரானின் அரசியல் சூழல் மற்றும் அமெரிக்காவின் தொடர் நடவடிக்கைகளால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், “ஈரானில் தற்போது நிலவும் அதிகாரப் போட்டியில் யார் தலைவர் என்பதை முடிவு செய்ய முடியாத குழப்ப நிலை நீடிக்கிறது; கடுமையான உள்நாட்டு மோதல்களுக்கு மத்தியில் இருக்கும் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கக் கடற்படையின் அனுமதியின்றி இனி எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டி வெளியேற முடியாது என்றும், தங்களுக்குச் சாதகமான ஒப்பந்தத்தை ஈரான் மேற்கொள்ளும் வரை இந்த நெருக்கடி தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்தியப் பெருங்கடலில் ஈரானுடன் தொடர்புடைய பெட்ரோலியக் கப்பல் ஒன்றை அமெரிக்கக் கடற்படை அதிரடியாகச் சிறைபிடித்துள்ளது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பலை வழிமறிக்க இரவு முழுவதும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முடக்கியுள்ள செய்தி, சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது; மேலும், அமெரிக்காவின் இந்த ‘அக்ரஸிவ்’ (Aggressive) நகர்வால் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதில் உலக நாடுகளிடையே பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version