Home செங்கல்பட்டு ஊரப்பாக்கம் சிக்னலில் லாரி மோதி தொடர் விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

ஊரப்பாக்கம் சிக்னலில் லாரி மோதி தொடர் விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

0

 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் சிக்னல் அருகே நின்று கொண்டிருந்த சிறிய லோடு ஆட்டோ மீது லாரி மோதியதில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. ஊரப்பாக்கம் சிக்னல் அருகே லாரி வந்தபோது, திடீரென அதன் பிரேக் கம்பி அறுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சிக்னலில் பச்சை விளக்குக்காகக் காத்து நின்று கொண்டிருந்த சிறிய சரக்கு லாரி (லோடு ஆட்டோ) மீது பலமாக மோதியது.

இந்த விபத்தின் வேகத்தால் லோடு ஆட்டோவின் ஓட்டுநரான பாண்டியன் என்பவர் இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்தார். மேலும், விபத்துக்குள்ளான லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மற்றும் கார் உள்ளிட்ட பிற வாகனங்களும் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதால் அந்த இடமே விபத்துக் களமாக மாறியது. இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குத் தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு போலீசாரும், மீட்புப் பணியாளர்களும் விரைந்து வந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓட்டுநர் பாண்டியனை மீட்ட அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்திய போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாகக் கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

NO COMMENTS

Exit mobile version