Home Trending/Viral Trending அமெரிக்க வரலாற்றில் முதல்முறை: பாஸ்போர்ட்டில் அதிபர் டிரம்பின் புகைப்படம்! வெள்ளை மாளிகை அறிவிப்பு!

அமெரிக்க வரலாற்றில் முதல்முறை: பாஸ்போர்ட்டில் அதிபர் டிரம்பின் புகைப்படம்! வெள்ளை மாளிகை அறிவிப்பு!

0

அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, அந்நாட்டுப் பாஸ்போர்ட்டுகளில் அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் இடம்பெறும் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஒரு சிறப்பு வெளியீடாக (Special Edition) இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் ஓர் அதிபரின் புகைப்படம் பாஸ்போர்ட்டில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.

வெள்ளை மாளிகையின் அறிவிப்பின்படி, புதிய பாஸ்போர்ட்டின் உட்புறத்தின் முதல் பக்கத்தில் அதிபர் டிரம்பின் புகைப்படமும், அதன் கீழே பொன் நிறத்தில் அவரது கையொப்பமும் (Signature) இடம்பெற்றுள்ளது. பிரிட்டன் மன்னர் சார்லஸ் அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் போது, இந்தச் சிறப்பு பாஸ்போர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இது அமெரிக்காவின் பெருமையையும், அதன் தற்போதைய தலைமையையும் பறைசாற்றும் நடவடிக்கை என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஸ்போர்ட் மட்டுமின்றி, அமெரிக்கக் கரன்சியான டாலரிலும் அதிபர் டிரம்பின் தாக்கம் எதிரொலிக்க உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, அமெரிக்க டாலர் நோட்டுகளில் டிரம்பின் கையொப்பம் இடம்பெறவுள்ளது. முதற்கட்டமாக, 100 டாலர் கரன்சியில் மட்டும் இந்தக் கையொப்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து படிப்படியாக மற்ற அனைத்து மதிப்பிலான கரன்சிகளிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் அறிவிப்பு அமெரிக்க அரசியலில் ஒரு மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசு சின்னங்களையும், தேசிய அடையாளங்களையும் தனிப்பட்ட விளம்பரத்திற்காக அதிபர் டிரம்ப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். “தேசிய அடையாளத்தையே ஒரு நபரின் புகைப்படம் மறைப்பது முறையல்ல” என்று விமர்சனங்கள் எழுந்தாலும், டிரம்பின் ஆதரவாளர்கள் இதனைச் சுதந்திர தினத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமாகப் பார்க்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version