ஜாதி மற்றும் மதம் அற்றவர் எனச் சான்றிதழ் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில், அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டதை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அதே சமயம் அத்தகைய கொள்கைகளைச் சான்றிதழ் மூலம் அல்லாமல் நடத்தையின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளது.
நடிகர் பார்த்திபன், தேச ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் விதமாகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவும் தான் ஜாதி மற்றும் மதம் அற்றவர் எனச் சான்றிதழ் வழங்கக் கோரி சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, ஏற்கனவே உள்ள ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பார்த்திபனுக்குச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த 27-ஆம் தேதி அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அர்த்தமுள்ள சமுதாயம் உருவாக வழிவகை செய்த நீதிபதிக்கு பார்த்திபன் தனது நன்றியைத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி எம். தண்டபாணி சில முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஜாதி மற்றும் மதம் அற்றவர் என்பதை உலகுக்குத் தெரிவிக்கச் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை. அது நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் நடத்தையின் மூலமே வெளிப்பட வேண்டும். இந்தச் சான்றிதழ் விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படலாம். உண்மையில் வட்டாட்சியருக்கு இத்தகைய சான்றுகளை வழங்க அதிகாரம் இல்லை. எனினும், முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் நான் இதற்கு உத்தரவிட்டேன்.
நீதிபதியின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த பார்த்திபன், “ஐயா, இன்றைய காலத்தில் ஒருவர் நல்லவர் என்று கூறுவதற்கு கூடச் சான்றிதழ் தேவைப்படும் சூழல் நிலவுகிறது” எனத் தனது கவலையை வெளிப்படுத்தினார். இறுதியில், பார்த்திபனுக்கு ஜாதி மற்றும் மதமற்றவர் எனச் சான்றிதழ் வழங்கப்பட்டதைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை முடித்து வைத்தது. சமூக மாற்றத்திற்காகப் பார்த்திபன் எடுத்துள்ள இந்த முயற்சி ஒருபுறம் பாராட்டப்பட்டாலும், “வாழ்ந்து காட்டுவதே உண்மையான சான்றிதழ்” என்ற நீதிபதியின் வரிகள் அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
