நாய் நகம் கீறியதில் அலட்சியம்: ரேபிஸ் பாதித்து பெண் உயிரிழப்பு

0
5

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே, நாய் நகம் கீறிய காயத்தை அலட்சியமாக எடுத்துக்கொண்டதால் 47 வயது பெண் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சுமதி, செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். வீட்டில் வளர்த்த நாய் குட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அதை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அதன் நகம் தோள்பகுதியில் கீறியதாக கூறப்படுகிறது.

சிறிய காயம் என்பதால் சுமதி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், நாய் குட்டிக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்ததால் எந்த ஆபத்தும் இல்லை என்ற தவறான நம்பிக்கையில், அவர் ஆன்டி-ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. காலப்போக்கில் காயம் ஆறியதால், அந்த சம்பவத்தையே அவர் மறந்துவிட்டார்.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சுமதிக்கு தண்ணீர் குடிக்க பயம், உணவைப் பார்க்க அச்சம் போன்ற ரேபிஸ் நோயின் தீவிர அறிகுறிகள் தோன்றின. உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பரிசோதனையில் ரேபிஸ் தொற்று தீவிரமடைந்தது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள், “நாய் கடித்தாலே மட்டுமே அல்ல, நகம் கீறினாலும் ரேபிஸ் பரவும் அபாயம் உள்ளது. காயம் ஏற்பட்ட உடனே சோப்பு நீரில் கழுவி, 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போடுவது அவசியம்” என்று எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம், செல்லப் பிராணி வளர்ப்பவர்களுக்கு முக்கிய விழிப்புணர்வாக அமைந்துள்ளது.