எரிவாயுடன் வந்த விக்ரம்; தாய்மார்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

0
5

அமெரிக்கா, இஸ்ரேல் போர் பதற்றத்துக்கிடையே 20,400 மெட்ரிக் டன் எல்பிஜியுடன் இந்தியக் கப்பல் குஜராத் வந்தடைந்ததை அடுத்து இந்தியாவிற்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் படிப்படியாக சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வாரங்களாக நீடித்த தற்காலிக போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஏப்ரல் 11ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணையை கடந்த இந்தியக் கப்பல்களில் முதன்மையானதாக ‘ஜக் விக்ரம்’ திகழ்கிறது. 20,400 மெட்ரிக் டன் எல்பிஜி ஏற்றிச் சென்ற இந்தியக் கப்பல் ‘ஜக் விக்ரம்’ குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வெற்றிகரமாக வந்தடைந்தது. ஹோர்முஸ் நீரிணையை கடந்து வந்த இந்த கப்பல், இரவு நேரத்தில் துறைமுகத்தில் நங்கூரமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரக்குகளை இறக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த வருகை, நாட்டின் எல்பிஜி விநியோகத்தை வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியதையடுத்து, ஈரான் முக்கிய கடல்சாலை வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இது உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது.

பின்னர் நடைபெற்ற சர்வதேச பேச்சுவார்த்தைகளின் மூலம், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி அளித்தது. அதில் இந்தியாவும் இடம்பெற்றது. இருப்பினும், வழக்கம்போல் அதிக எண்ணிக்கையில் கப்பல்கள் இயங்காமல், குறைந்த அளவிலேயே போக்குவரத்து நடைபெற்றது.

இந்நிலையில், ஈரான்–அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பலனின்றி முடிந்ததால், மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையின் சுமார் 90 சதவிகிதத்தை வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ‘ஜக் விக்ரம்’ வருகை, இந்த சூழலில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.