Home Politics “மீண்டும் திமுக ஆட்சிதான்!” – திருமாவளவன் அதிரடி!

“மீண்டும் திமுக ஆட்சிதான்!” – திருமாவளவன் அதிரடி!

0

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் முடிவுகள் மற்றும் விஜய் தலைமையிலான தவெக ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

திருமாவளவன் பேசுகையில், “தமிழகத் தேர்தலில் பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. இது ஒரு வழக்கமான வாக்குப்பதிவுதான். தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் திருத்தம் மூலம், கடந்த காலங்களில் எண்ணிக்கையில் மட்டுமே இருந்த லட்சக்கணக்கான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

அந்த வாக்குகள் நீக்கப்படாமல் இருந்திருந்தால், பழையபடியே 73% அல்லது 74% வாக்குப்பதிவுதான் நடந்திருக்கும். தற்போது அந்த வாக்குகள் நீக்கப்பட்டதால், சதவீதம் கூடுதலாகத் தெரிகிறது. இது வெறும் தோற்றமே தவிர உண்மை இல்லை” என்று விளக்கமளித்தார். மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 20 முதல் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைவது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், “களத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்த அனுபவத்தில் இருந்து கூறுகிறோம், தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என உறுதிபடத் தெரிவித்தார். அதேநேரம், ‘தொங்கு சட்டமன்றம்’ அமையும் என்று தான் கூறவில்லை என்றும், நடிகர் விஜய் தலைமையிலான கட்சி வாங்கும் வாக்கு சதவீதத்தைப் பொறுத்து, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றே தான் கூறியதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

NO COMMENTS

Exit mobile version