தமிழ் சின்னத்திரையில் தனது யதார்த்தமான நடிப்பால் இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிவாஷினி கிருஷ்ணன், தற்போது பாலிவுட் திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான தொடக்கத்தைப் பெற்றுள்ளார். புராணக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிருஷ்ணவதார்’ (Krishnavatar) திரைப்படத்தின் மூலம் அவர் இந்தித் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
தமிழகத்தின் பரமக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட நிவாஷினி, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். லண்டனில் உள்ள புகழ்பெற்ற கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் பேஷன் மீடியா துறையில் உயர்கல்வி முடித்த இவர், கலைத் துறையில் இருந்த ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்தார். தமிழில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் நடித்ததன் மூலம் ஏற்கனவே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள நிவாஷினி, தற்போது ‘கிருஷ்ணவதார்’ படத்தின் மூலம் அகில இந்திய அளவிலான நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
மே 7-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘கிருஷ்ணவதார்’ பாகம் 1-ல், நிவாஷினி கிருஷ்ணன் கடவுள் கிருஷ்ணனுக்கு ஜோடியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க ருக்மிணி வேடத்தில் நடித்துள்ளார். Creativeland Studios Entertainment மற்றும் Athasrikatha Motion Pictures இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் ஹர்திக் குஜ்ஜர் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், நிவாஷினியின் திரையுலகப் பயணத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
