திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம் கோலாகலத் தொடக்கம்!

0
4

மாமல்லபுரம் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் மிகவும் விமரிசையாகத் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டுப் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு அங்குரார்ப்பணம் மற்றும் பூர்வாங்க வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் தொடக்கமாக மகாமண்டபத்தில் உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்களுடன் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
விழாவின் முதல் நாள் மாலை, உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் அன்ன வாகனத்தில் அமர்ந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில், ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு, வரும் மே 5-ஆம் தேதி, பக்தர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கருட வாகன சேவை நடைபெறவுள்ளது. மே 7-ஆம் தேதி பிரம்மாண்டமான தேர் திருவிழா நடைபெற உள்ளது.

வரும் மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ள தெப்போற்சவத்துடன் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ விழா இனிதே நிறைவடைகிறது. திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகப் போற்றப்படுவதால், இந்தத் திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.