திம்மாவரம் பகுதியில் அமைந்துள்ள ஓம் சிவசக்தி முத்துமாரி அம்மன் கோயில் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஊஞ்சல் விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடத்துவது வழக்கமாக உள்ளது. அதன்படி நேற்று (மே 16) நடைபெற்ற வைகாசி அமாவாசை விழாவையொட்டி, காலை முதலே அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மாலை நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உற்சவர், ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அம்மனை வழிபட்டு குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்தனர்.
விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.
