செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட வேதாச்சலம் நகர் தேவராஜனர் தெருவில் நடைபெற்று வரும் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக சாலை நடுப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, வீடுகளின் முன்பாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மழை பெய்தால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி விபத்து அபாயமும் அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், இரவு நேரங்களில் போதிய எச்சரிக்கை பலகைகள் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, சாலையை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
