வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகையாளர்கள் இடையிலான பிரச்சினைகளை குறைக்கும் வகையில் இந்த விதிகள் அமலில் உள்ளன.
அதன்படி, ஆண்டுக்கு அதிகபட்சமாக 5 சதவீதம் மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் வாடகை உயர்த்தப்படுமானால் அது விதிமுறை மீறலாக கருதப்படும்.
மேலும், வீடு வாடகைக்கு விடும் போது இரண்டு மாத வாடகை தொகையை மட்டுமே அட்வான்ஸாக பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பல இடங்களில் 6 மாதம் முதல் 10 மாதம் வரை அட்வான்ஸ் கேட்கப்படுவதாக வரும் புகார்களை தொடர்ந்து இந்த விதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அதேபோல், வாடகையை உயர்த்த வேண்டுமெனில் குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பே வாடகையாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி அதிக வாடகை உயர்வு, கூடுதல் அட்வான்ஸ் தொகை கோருதல் உள்ளிட்ட செயல்களில் வீட்டு உரிமையாளர்கள் ஈடுபட்டால், பொதுமக்கள் 1800 599 01234 என்ற உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் புதிதாக குடியேற திட்டமிடுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
