தென் மாநிலங்களில் மின் தேவையில் தமிழகம் முதலிடம்: மின் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிக்கை!

0
9

கோடை வெயில் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மின்சாரத் தேவை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வரும் மே மாதம் முதல் தமிழகத்தில் மாலை நேரங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்துறை எச்சரித்துள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மின்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த மின் தேவை 69,934 மெகாவாட்டிலிருந்து 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதில் தென் மாநிலங்களிலேயே அதிக மின் தேவை கொண்ட மாநிலமாகத் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தின் தினசரி மின் தேவை 19,679 மெகாவாட்டிலிருந்து 19,822 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களான தெலுங்கானா (18,548 MW), கர்நாடகா (18,655 MW) மற்றும் ஆந்திரா (14,011 MW) ஆகிய மாநிலங்களிலும் மின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. கேரளா 5,844 மெகாவாட்டாகத் தனது தேவையைப் பதிவு செய்துள்ள நிலையில், புதுச்சேரி மட்டும் 476 மெகாவாட்டாகச் சற்று குறைவான தேவையைக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் மே மாதம் முதல் நிலவப்போகும் மின் பற்றாக்குறை குறித்துத் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோடைக் காலத்தின் உச்சத்தில் மின் நுகர்வு எவ்வளவு இருக்கும் என்பதை நாங்கள் முன்கூட்டியே கணித்துள்ளோம்; குறிப்பாக மாலை நேரங்களில் ஏ.சி மற்றும் மின்விசிறிகளின் பயன்பாடு அதிகரிப்பதால் தேவை கூடுகிறது.

பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், வெளி மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்வாரியம் எடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் மின்வெட்டு குறித்து அச்சப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார். இருப்பினும், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமானது என மின்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

tamil-nadu-power-demand-increase-may-2026-electricity-shortage-warning