Home Politics தேர்தல் நாளில் கடும் வெயில் எச்சரிக்கை

தேர்தல் நாளில் கடும் வெயில் எச்சரிக்கை

0

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கடும் கோடை வெயில் நிலவி வரும் நிலையில், நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் நாளிலும் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் பல உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உள் தமிழக பகுதிகளில் அடுத்த சில நாட்கள் வரை வெப்பநிலை உயர்ந்தே இருக்கும். அதேசமயம், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை சாதாரண அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிக ஈரப்பதம் காரணமாக கடலோர பகுதிகளில் வெப்பத்தால் ஏற்படும் அசௌகரியம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை ஏப்ரல் 26ஆம் தேதி வரை நீடிக்கக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பாதுகாப்புக்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் பந்தல்கள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், போதுமான குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. மேலும், வெயில் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை வழங்க உப்புச் சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் காலை 7 மணி முதல் 10 மணிக்குள் வாக்களிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வாக்காளர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லவும், வெயிலில் நீண்ட நேரம் நிற்காமல் கவனமாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக கடமையை நிறைவேற்றும் நிலையில், வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

இருந்தாலும் குடை, குடிநீர் ஆகியவற்றை வாக்காளர்கள் வீட்டிலிருந்து எடுத்து வருதல் நலம். வழக்கமாக சாலைகளில் பழச்சாறு கடைகள் போடும் வியாபாரிகள் நாளை ஒருநாள் வாக்குச்சாவடி மையங்கள் அருகே கடை அமைத்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து வாக்காளர்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

NO COMMENTS

Exit mobile version