Home Trending/Viral Viral நடிகர் பார்த்திபனுக்கு ‘ஜாதி-மதமற்றவர்’ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் பார்த்திபனுக்கு ‘ஜாதி-மதமற்றவர்’ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

0

இந்தியாவிலேயே ஒரு சிலரே செய்துள்ள புரட்சிகரமான செயலைத் தற்போது நடிகர் பார்த்திபன் சட்டப்பூர்வமாக வென்றுள்ளார். தனக்கு ‘ஜாதி மற்றும் மதமற்றவர்’ எனச் சான்றிதழ் வழங்கக் கோரி அவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தான் 1958-ம் ஆண்டு பிறந்ததற்கான பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றும், பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பிற்குப் பின் கல்விச் சான்றுகளைத் தான் பெறவில்லை என்றும் பார்த்திபன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். தன்னிடம் ஜாதி, மதத்தை அடையாளப்படுத்தும் எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சமூகப் பிளவுகளுக்கு அப்பாற்பட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ விரும்புவதாகத் தெரிவித்தார்.

தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி வருவாய்த் துறை அதிகாரிகள் இந்த விண்ணப்பத்தைத் தள்ளிப்போட்டு வந்தனர். இது குறித்து சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி பார்த்திபன் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் பார்த்திபனின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டார்.

“நடிகர் பார்த்திபனுக்கு அவர் ஜாதி – மதமற்றவர் என்பதற்கான சான்றிதழைச் சோழிங்கநல்லூர் தாசில்தார் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்” என்று நீதிபதி எம்.தண்டபாணி அதிரடியாக உத்தரவிட்டார். இதன் மூலம், சமூக மாற்றத்திற்கான பார்த்திபனின் நீண்ட கால முயற்சிக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.

திரையுலகில் மட்டுமின்றி சமூகத்திலும் தனக்கென ஒரு தனிப்பாதையை உருவாக்கி வரும் பார்த்திபன், இந்தத் தீர்ப்பின் மூலம் மீண்டும் ஒருமுறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜாதி, மத அடையாளங்களைக் கடந்து நிற்க விரும்பும் பலருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மாபெரும் ஊக்க சக்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

NO COMMENTS

Exit mobile version