தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தின் முக்கிய கட்டமாக, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி வழியாக புதிய ஆறு வழிச்சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை மாநகருக்குள் நுழையாமல் மாற்றுப்பாதை வழியாக செல்லும் வகையில், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் 16 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி சாலையில் பீர்க்கன்காரணை அருகே தொடங்கி சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சேரி, ராஜகீழ்ப்பாக்கம் மற்றும் சேலையூர் வழியாக வேளச்சேரி சாலை வரை இந்த திட்டம் விரிவாக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியாக, ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பு முதல் அகரம்தென் சந்திப்பு வரை 1,442 மீட்டர் நீளத்திற்கு ஆறு வழிப்பாதை கொண்ட இருவழி மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.208.31 கோடி மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன.
மேம்பாலம் 23 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படவுள்ளது. இதில் மொத்தம் 70 தூண்கள் அமைக்கப்படுகின்றன. பணிகளை 16 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் அருகே ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்திற்காக 2024 டிசம்பர் மாதம் முதல் ராஜகீழ்ப்பாக்கம் ஏரிப் பகுதியில் உள்ள 136 கட்டிடங்கள் அகற்றப்பட்டன. மேலும் பல இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின், பெருங்களத்தூர் மேம்பாலம் வழியாக வரும் கனரக வாகனங்கள் நெடுங்குன்றம், சதானந்தபுரம், சேலையூர் வழியாக நேரடியாக வேளச்சேரி சாலையை அடைய முடியும். இதனால் தாம்பரம், பெருங்களத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திட்டத்தின் ஒரு பகுதி வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் அமைவதால், மாற்று நிலம் ஒதுக்குவது தொடர்பான நிர்வாக சிக்கல்கள் இன்னும் நீடித்து வருகின்றன. அந்த அனுமதிகள் கிடைத்தவுடன் மீதமுள்ள பணிகளும் விரைவாக முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
