தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு தொழில்திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் சிறப்பு பயிற்சி திட்டங்களை அறிவித்துள்ளது.
இதன்படி, ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course) மற்றும் துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் (Certificate in Textile Painting, Dyeing & Printing Course) ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சிகளில் சேர விரும்புவோர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பதும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் கால அளவு நான்கு மாதங்கள் ஆகும். இந்த பயிற்சிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதால், தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்கள் விடுதியில் தங்கி பயிலும் வசதியும் வழங்கப்படும். தங்கும் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தாட்கோ ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை பெறும் வாய்ப்பும் வழங்கப்படும்.
ஆர்வமுள்ள இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
இத்தகவலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.





