தமிழ்நாட்டின் நலனைக் காக்க மேலும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தேர்தல் முடிவுகளைத் தாண்டியும், தலைவர் கலைஞர் உருவாக்கிய கொள்கை மற்றும் உணர்வோடு திமுகவினர் தொடர்ந்து பயணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் ஜூன் 3ஆம் தேதி நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள், கட்சியினருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நாளாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏழை மற்றும் எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலைஞரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் திமுக அவசியம் என்பதை இளைஞர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். கலைஞரின் பிறந்தநாளில் அதற்கான உறுதியை ஏற்று செயல்படுவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல அல்லாமல், கொட்டியும் ஆம்பலும் போல எப்போதும் உடனிருப்பவர்கள்தான் திமுக உடன்பிறப்புகள்” என்றும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஜூன் 3ஆம் தேதி திமுக கிளைகளில் கருப்பு-சிவப்பு கொடிகளை ஏற்றி, கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கும் ஏழை மக்களுக்கும் உதவிகள் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் கலைஞரின் சாதனைகளை பரப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
