கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, பிளஸ் 2 மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று திருமணம் செய்ததாக கூலி தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த கட்டாய திருமணத்திற்கு உதவியதாக அவரது குடும்பத்தினரான இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, உயர்கல்விக்காக தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற நாளில், மாணவியின் பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றிருந்தனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது கருங்குழி கிராமத்தை சேர்ந்த முனீஸ்வரன் (40) என்ற கூலி தொழிலாளி மாணவியின் வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாணவியை கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
அங்கு முனீஸ்வரனின் அக்கா மீனாட்சி மற்றும் தம்பி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் மாணவிக்கு தாலி கட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி கதறி அழுததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர்.
மேலும், மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக மீனாட்சி மற்றும் கிருஷ்ணமூர்த்தி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
