காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் விளையாட்டு துறை சார்பில் நடத்தப்பட்ட கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஒரு மாத காலமாக நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு விழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது.
இளம் தலைமுறையினரிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பயிற்சி பெற்றனர்.
முகாமின் போது, துறைசார் நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் தொழில்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன. உடல் தகுதி, விளையாட்டு நுட்பங்கள், குழு ஒத்துழைப்பு, போட்டி மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டப்பட்டது.
இந்த பயிற்சி முகாம், எதிர்காலத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு பயனுள்ள அனுபவமாக அமைந்ததாக பெற்றோர்களும் பயிற்சியாளர்களும் தெரிவித்தனர்.
நிறைவு விழாவை முன்னிட்டு மாணவர்கள் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் கல்வியுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக இதுபோன்ற பயிற்சி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
