செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் 8 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பெருமாள் கோவிலைச் சேந்த 8 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை காரணமாக பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி, ஜனார்த்தனன் என்ற இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வேலை முடித்து வீட்டிற்கு வந்த பெற்றோர், சிறுமிக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கேட்டபோது, ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் உடனடியாக கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஜனார்த்தனனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர் வேலைக்குச் செல்லும் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகி இருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலை சந்தித்தால் உடனடியாக 1098 குழந்தைகள் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், பெற்றோர் இல்லாத நேரங்களில் குழந்தைகளை தனியாக விடாமல் நம்பகமானவர்களின் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




