அதிமுகவில் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து, முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் சமீப காலமாக நடைபெற்று வரும் சம்பவங்கள் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தற்போதைய சூழலில் தொடர்ந்து பயணிக்க தனது மனம் இடமளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கி வளர்த்த இயக்கம் இன்று உள்கட்சி மோதல்களால் அவமானத்திற்கு உள்ளாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என்ற வரிகள் மூலம் தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தலுக்கு பிறகு கட்சியில் நடந்த பல சம்பவங்கள் திருப்தியளிக்காமல் கவலையை மட்டுமே ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமக்கு வழங்கிய வாய்ப்புகளை என்றும் மறக்க முடியாது என்றும், அவர்களின் நம்பிக்கைக்காக கட்சியில் நீண்ட காலம் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டபோதும், தலைமைக்கு கட்டுப்பட்டு அமைதியாக பணியாற்றி வந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், தற்போதைய அரசியல் மற்றும் கட்சி நிலைமைகள் தன்னை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், தொடர்ந்து கட்சியில் இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தாம் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மற்றும் அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
செம்மலையின் இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சிக்குள் உருவாகியுள்ள அதிருப்தி மற்றும் குழப்ப நிலையை இது மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
