திருப்போரூர் அருகே செம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் சிறப்பாக நடைபெற்றன. குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
விழாவை முன்னிட்டு மே 25ஆம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை மற்றும் லட்சுமி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவார திருவாசக முற்றோதல் மற்றும் தட்சிணாமூர்த்தி சுவாமி, சனகாதி முனிவர்கள் குறித்து ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு நவகிரக பூஜை, நவகிரக ஹோமம், விசேஷ அபிஷேகம் மற்றும் குரு பெயர்ச்சி பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
மே 26ஆம் தேதி காலை 7 மணிக்கு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் மற்றும் குரு பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்குப் பிறகு புஷ்பாஞ்சலி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
மே 27ஆம் தேதி காலை 8 மணிக்கு சாந்தி பூஜை மற்றும் விடையாற்றி உத்சவத்துடன் குரு பெயர்ச்சி விழா நிறைவடைகிறது. இந்த விழாவிற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
