Home Politics “ஊழல் பணத்தை மீட்டு மக்கள் நலத்திட்டங்கள்”: செங்கல்பட்டில் சசிகலா தேர்தல் பிரச்சாரம்!

“ஊழல் பணத்தை மீட்டு மக்கள் நலத்திட்டங்கள்”: செங்கல்பட்டில் சசிகலா தேர்தல் பிரச்சாரம்!

0

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அகிபுதமமுக) மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கூட்டணி சார்பில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராமகிருஷ்ணனை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சசிகலா இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். செங்கல்பட்டு ராட்டினக்கிணறு பகுதியில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் திரளான தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

“எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழக மக்களுக்காக 60 சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளோம். இவை எப்படிச் சாத்தியம் என்று பலரும் கேட்கிறார்கள். தமிழக மின்சாரத் துறையில் நடந்துள்ள பிரம்மாண்டமான ஊழல் பணத்தை மீட்டாலே, நாங்கள் அறிவித்துள்ள அனைத்து 60 திட்டங்களையும் எங்களால் செம்மையாக நிறைவேற்ற முடியும்,” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

செங்கல்பட்டு நகரின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்துப் பேசிய அவர், “செங்கல்பட்டில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தென்மாவட்டப் பேருந்துகள் செங்கல்பட்டு நகருக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, நீண்ட காலமாகக் காலாவதியான நிலையில் இருக்கும் பரனூர் சுங்கச்சாவடி (Paranur Tollgate) உடனடியாக அகற்றப்படும்,” என உறுதி அளித்தார். மேலும், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்து தட்டுப்பாட்டை நீக்கித் தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட சுபாஷ் ஆனந்துக்கு பதிலாக, தற்போது மாற்று வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ணனுக்கு ‘தென்னந்தோப்பு’ சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். “மருத்துவர் ஐயா ராமதாஸின் ஆசி பெற்ற வேட்பாளர் ராமகிருஷ்ணனைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்,” என்று தொண்டர்களிடையே வேண்டுகோள் விடுத்தார்.

NO COMMENTS

Exit mobile version