புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 16-வது பொதுத்தேர்தல் கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை (மே 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 6 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பலமுனைப் போட்டிகள் நிலவுகின்றன. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி; காங்கிரஸ், திமுக, விசிக உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி; மற்றும் தவெக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
30 தொகுதிகளில் 117 சுயேச்சைகள் மற்றும் 40 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 9,44,211 வாக்காளர்களில் 91.23 சதவீதத்தினர் வாக்களித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
நான்கு பிராந்தியங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் மற்றும் தாகூர் கலைக் கல்லூரி.
காரைக்காலில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, மாகேவில் ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஏனாமில் டாக்டர் எஸ்.ஆர்.கே. அரசு கலைக் கல்லூரி. முதலில் தபால் ஓட்டுகளும், காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் எண்ணப்படும். புதுச்சேரியில் மட்டும் 35 மேசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 218 மேற்பார்வையாளர்கள் மற்றும் 221 உதவியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் எவ்விதத் அசம்பாவிதமுமின்றி நடைபெறக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய ஆயுதப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையென 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். புதுச்சேரியின் 30 தொகுதிகளில் முதல் சுற்றில் 17 தொகுதிகளும், இரண்டாவது சுற்றில் மீதமுள்ள 13 தொகுதிகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
