Home Trending/Viral Trending வாக்கு எண்ணிக்கை தயார்நிலை: இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி ஆலோசனை!

வாக்கு எண்ணிக்கை தயார்நிலை: இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி ஆலோசனை!

0

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெற உள்ள நிலையில், இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தீவிர ஆலோசனை நடத்தினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை பணிகள் நாளை காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளன. இதற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் அந்தந்த மாநிலத் தேர்தல் ஆணையங்களால் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய, இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டனர். தேர்தல் நடந்த மாநிலங்களின் தேர்தல் பார்வையாளர்களுடன் டெல்லி அதிகாரிகள் நேரடியாக உரையாடினர். இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பங்கேற்று, தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

வாக்கு எண்ணிக்கைக்கான கள ஏற்பாடுகள், தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கத் தேவையான தொழில்நுட்ப வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. நாளை காலை 8 மணி முதல் முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என்பதால் நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

NO COMMENTS

Exit mobile version