மறைமலை நகர் அருகே பொத்தேரியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஏரிவாக்கம் பகுதியை சேர்ந்த ரகுபதியின் மகன்கள் லோகித் (20), வைபவ் (16). இதில் லோகித், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். வைபவ் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று லோகித் தனது நண்பரை சந்திக்க டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் பொத்தேரி நோக்கி சென்றார். அவருடன் தம்பி வைபவும் சென்றிருந்தார். ஜி.எஸ்.டி சாலையில் பொத்தேரி ரயில் நிலையம் எதிரே சென்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வைபவ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த லோகித் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




