ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க ஐரோப்பியப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று (மே 21) அதிகாலை டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த சில மணி நேரங்களிலேயே நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்த மிக முக்கிய அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளார்.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) பகுதியில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான போர் மூண்டு, உலக அளவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த அச்சுறுத்தலின் நேரடி எதிரொலியாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை விண்னைத் தொடும் அளவிற்கு இமாலய உயர்வைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்ட “அமைச்சர்கள் குழு” (IGoM) மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார். இப்போரினால் இந்தியப் பொருளாதாரம், உள்நாட்டுச் சந்தை மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலியில் (Supply Chain) ஏற்படப் போகும் கடுமையான தாக்கங்கள் குறித்து இந்த உத்திசார் கூட்டத்தில் மிக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கியத் தரவுகளின்படி, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகக் கொடூரமாக உயர்ந்திருந்த போதிலும், அதன் சுமையையும் விண்ணை முட்டும் விலையையும் இந்தியப் பொதுமக்கள் மீது நேரடியாகத் திணித்துவிடக் கூடாது என்பதில் புதிய அரசு மிகவும் கறாராக உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (Oil Marketing Companies) தற்போதைய முதல் காலாண்டில் நாளொன்றுக்குச் சுமார் 1,000 கோடி ரூபாய் வரையிலான இமாலய நஷ்டத்தைத் தாங்களாகவே உள்வாங்கி நுகர்வோரைக் காத்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக நாடுகள் பலவும் தங்களது உள்நாட்டுப் பயன்பாட்டை அவசர அவசரமாகக் குறைத்து வரும் வேளையில், இந்தியாவிற்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும்; நாட்டில் தற்போது 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவும், 45 நாட்களுக்குத் தேவையான எல்பிஜி (LPG) சிலிண்டர் கையிருப்பும் (Rolling Stock) மிகவும் பத்திரமாக உள்ளதாகப் பிரதமரிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய இந்த விபரீதப் போர்ப் பொருளாதாரச் சூழலிலும் இந்தியாவின் சந்தை ஸ்திரத்தன்மையைப் பேணப் பிரதமர் மோடி எடுத்து வரும் இந்த உடனடி ராஜதந்திர நடவடிக்கைகள் கார்ப்பரேட் மற்றும் பொதுத்துறை வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.





